முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முதலாவது கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து ‘ஓய்வு வயது என்ற போர்வையில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் கை வைக்காதே’ எனும் தொனிப்பொருளில் பதாகைகளை ஏந்தி 22ஆவது திருத்தத்துக்கு எதிராக தத்தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது சட்டத்தரணி நுவான் போபகே ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் எப்போதும் நீதிமன்றம் போன்ற நிறுவனங்களின் சுயாதீனத்தில் தலையிடவே முயற்சித்துள்ளது. ஜே.ஆர். ஜெயவர்த்தன, ராஜபக்ஷ மற்றும் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இதற்குப் பல அனுபவங்கள் உள்ளன. தற்போது அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கமும் நீதிமன்றத்தில் தலையீடு செய்து வரலாற்றுப் கறை படிந்த பக்கத்தை உருவாக்கியுள்ளது. அதற்காக அரசாங்கம் கடிதங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளை மறைத்து, பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி அவதூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் இந்தத் திருத்தத்தின் மூலம் தற்போதைய பிரதம நீதியரசருக்கு மேலும் 02 ஆண்டுகள் பதவியில் இருக்க வாய்ப்பு கிடைக்கிறது. நீதிபதிகள் தமக்குத்தானே சலுகை கிடைக்கும் ஒரு வழக்கை அவரே விசாரணை செய்வது இயற்கை நீதிக்கோட்பாடுகளுக்குப் புறம்பானது.
இந்த மனுக்களை 13 நீதிபதிகள் கொண்ட முழுமையான நீதிபதிகள் குழாம் விசாரணை செய்ய வேண்டும் எனப் பல சட்டத்தரணிகள் கோரியபோதிலும், அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்ட குழுவினர் அதனை எதிர்த்தனர். இறுதியில் பிரதம நீதியரசர் அரசாங்கத்தின் கருத்துக்கு அமைவாகத் தமக்கு வேண்டிய 04 நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து 05 பேர் கொண்ட அமர்வை அமைத்துள்ளார்.
சுமார் 40 முதல் 60 க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் இந்தத் திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு அனுப்ப வேண்டும் எனக் கோருகின்றனர். இந்தச் சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படப் போவது சாதாரண பொதுமக்களே ஆகும். அரசியலமைப்பு ரீதியாக ஆட்சியாளர்கள் வந்தாலும் இறுதியான இறைமை மக்களிடமே உள்ளதால், மக்கள் சக்தியைப் பயன்படுத்தி இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராகப் போராட வேண்டும் எனத் தெரிவித்தார்.



