தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஆணையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம் ‘பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டம்’ என அறிமுகப்படுத்தப்படும். அதன் பிரகாரம் தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் இதன் மூலம் நீக்கப்படும்.
சந்தேகம் களைவதற்காக, இந்த சட்டம் செயற்பட ஆரம்பிக்கும் தினத்துக்கு முன்னதாக, தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, 1982ஆம் ஆண்டு 1ஆம் இலக்க சட்டத்தின் 9ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய அல்லது 1990ஆம் ஆண்டு 47ஆம் இலக்க சட்டத்தின் 9ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் கீழ் ஓய்வூதியம் பெறும் யாராவது ஒருவருக்கு இந்த சட்டம் செயற்பட ஆரம்பிக்கும் தினம் மற்றும் அந்த தினத்திற்கு பின்னர் அந்த ஓய்வூதியம் பெறுவது நிறுத்தப்படவேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



