பாராளுமன்றில் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய -கஜேந்திரன்

தினம் பாராளுமன்றம் கூடிய போது, அங்கு உரை நிகழ்த்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள், உரையாற்றுவதற்கு முன்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது உரையை ஆரம்பித்தார். அவரின் உணர்ச்சிபூர்வமாக அமைந்த உரையை கீழே தருகின்றோம்.

மதிப்பிற்குரிய பிரதி சபாநாயகர் அவர்களே இன்றைய தினம் இந்த நாடாளுமன்றத்திலே உங்கள் தேசத்தின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்காக நீங்களே 20ஆவது திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்திருக்கின்ற இந்த வேளையிலே, இன்றைய நாள் தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையிலே மிக முக்கியமான நாள். எங்களது தேசத்தினதும், உங்களது தேசத்தினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், எமது தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காகவும் ஜனநாயக வழியிலே, வன்முறையின்றி உணவுமின்றி, நீருமின்றி உண்ணா நோன்பிருந்து  உயிர்த் தியாகம் செய்த மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 8ஆம் நாள் நினைவேந்தலை நாங்கள் இதயத்திலே நிறுத்தி அவர்களுக்காக ஒரு நிமிடம் தலைசாய்த்து நான் என்னுடைய உரையைத் தொடருகின்றேன்.

20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடென்றும், ஒரு தேசத்துரோக செயற்பாடு என்று சொல்லியும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து, அதற்கெதிராகப் போராட்டம் செய்து உரைநிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் நான் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்பும் விடயம், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியினர், இந்த நாட்டின் அரசியலமைப்பின் 10ஆம், 14ஆம் ஷரத்துக்களின்படி பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கூட்டாக செயற்படும் சுதந்திரம், கூட்டாக நினைவுகூரும் சுதந்திரம் போன்றவற்றை அனுஸ்டிக்கக்கூடிய இந்த அரசியலமைப்பின் பிரகாரம் இருக்கக்கூடிய நினைவேந்தல் உரிமையை, எங்களின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூருகின்ற அந்த உரிமையை இந்த அரசு முற்றாக மறுத்திருக்கின்றது. அதனை ஆமோதித்துக் கொண்டிருக்கின்ற இந்த எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.  இது கவலைக்குரிய விடயம். 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாங்களும் இருக்கின்றோம். அது நீக்கப்பட வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது கருத்தும்.

ஆனால் எதிர்க்கட்சியினர் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்தத் தீவின் சகோதர தேசத்தின் ஜனநாயக உரிமைகளை முற்றாக மறுத்துக் கொண்டு, உங்கள் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் ஒருபோதும் நினைக்கக் கூடாது. கடந்த 70 ஆண்டுகளாக உங்கள் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு இது ஒரு காரணமாகும்.

18ஆவது திருத்தச் சட்டத்தினூடாக உங்களால் ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. 19ஆவது மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. 20ஆவதின் மூலமாகவும் உங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்த நாட்டில் தமிழர்களின் ஜனநாயகத்தை நசுக்கிக் கொண்டு ஒருபொழுதும் உங்களால் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாகப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

குற்றவியல் சட்டக்கோவை 106/1இன் மூலம் வடக்குக் கிழக்கிலே நாங்கள் எங்கள் உரிமைக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர முடியாது என்று நீதிமன்றம்ஒன்று  கட்டளையிட்டிருக்கின்றது.

அதேபோன்று வவுனியா வடக்கு நெடுங்கேணியிலே வெடுக்குநாறி சிவன் ஆலயத்திலே திருவிழா நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயன்ற போது பொலிசார் அங்கு சென்று வலிந்து வழக்குத் தாக்கல் செய்தார்கள். ஆனால் இதே 106/1இன் கீழ்  திருவிழாவை தடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் அந்த ஆலயத்திலே திருவிழாவை முற்றாகக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக நீதிமன்றம் கூறிய தீர்ப்பினை கடைப்பிடித்து, வீடுகளிலே சுவாமிக்குகூட பூ வைக்க முடியாது  காவல்துறையினரின் கெடுபிடிகள் உச்சக் கட்டத்தையடைந்துள்ளது.

மட்டக்கப்பிலே காவல்துறை அதிகாரி எங்களின் கட்சி உறுப்பினர் குணராசா குணசேகரன் அவர்களை அழைத்து திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால், உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்க மாட்டார்கள் என்று கூறி அச்சுறுத்தியிருக்கின்றார்.

இப்படியான நெருக்கடியான நிலைமையிலே தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். எங்களைப் பொறுத்தவரையில் எங்களின் உரிமைக்காக உயிர்நீத்தவர்களுக்கு நினைவேந்துவதற்காக தொடர்ச்சியாக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டேயிருப்போம்.

உள் நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் நாங்கள் இந்த நினைவேந்தலுக்காக போராடிக் கொண்டிருப்போம் என்பதை இந்த இடத்திலே ஆணித்தரமாகக் கூறிக் கொள்கிறேன்.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரப் பகுதியிலுள்ள வவுனியா குளம் சட்டவிரோதமாக நிரப்பப்பட்டு அங்கு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்கா அமைப்பதற்கான அனுமதி மாகாண நீர்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்படவில்லை. உங்கள் அமைச்சரவையினாலும் வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவினாலும் வழங்கப்படவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆய்வறிக்கைகள் எதுவும் அங்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பாக நீங்கள் கருத்திற் கொள்ள வேண்டும். அந்தக் குளத்தைச் சுற்றியுள்ள 30 கிராமங்களில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படுகின்றது. அதனால் வவுனியா நகர மக்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்குடா வெளியில் சுமணரத்தின தேரர் அவர்கள் தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரினால், அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.  அங்கே அவரின் செயற்பாடுகள் தமிழர்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே இந்த நிலைமைகளை இந்த சபை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டு, என்னுடைய கருத்துக்களை நிறைவு செய்து கொள்கின்றேன். நன்றி என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

தனது உரைக்குரிய நேரம் முடிவடைந்த நிலையிலும், மேலும் நேரம் கேட்டு தனது உரையை ஆவேசமாகவும் விரைவாகவும் ஆற்றியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.