இலங்கை-பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

இலங்கை- ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று இடம்பெற்றது.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியதுடன், வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க முன்வைத்ததைத் தொடர்ந்து, வேட்டு மனுத் தாக்கல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகபெருமவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததுடன், அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

அத்துடன், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், அதனை மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.

இதன்படி, மூன்று பேர் ஜனாதிபதி வாக்கெடுப்புக்காக முன்வந்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரே, ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்புக்காக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், நாளைய தினம் (20) ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு சபை   ஒத்திவைக்கப்பட்டுள்ளது.