பாகிஸ்தானில் படுகொலை முயற்சி ஒன்றில், துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மருத்துவமனையில் தற்போது நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வந்தார்.
ஆறு நாட்களுக்கு முன்பு தொடங்கிய அவரது பேரணி வியாழக்கிழமை பஞ்சாப் மாகாணத்தின் வஜிராபாத் சென்றடைந்தது. அவரது கட்சியின் முன்னணி தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். இம்ரான் கான் தனது பிரச்சார வாகனத்தின் உச்சியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவரது இரண்டு கால்களிலும் 3 குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளார்.
இற்றிலையில், இரு கால்களிலும் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் வஜிராபாத்தில் இருந்து உடனடியாக அவர் லாகூரில் உள்ள ஷவுகத் கானும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இம்ரான் கான் ஆபத்து கட்டத்தை கடந்துவிட்டதாகவும், நலமாக இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.