வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக்கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினைக் கண்டித்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் மைப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஆகியன இந்தப்போராட்டத்தினை  கூட்டிணைந்து முன்னெடுப்பதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ளன.

குறித்த போராட்டமானது, இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் முதலாவதாக முன்னெடுக்கப்பட்டு கணிசமான இடைவெளிகளில் வடக்கு, கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப்போராட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகஇளம் அரசியல் தலைவர்கள் ஐவர் அடங்கிய ஏற்பாட்டுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில், கலாநிதி.க.சர்வேஸ்வரன், குருசுவாமி சுரேந்திரன், பாலச்சந்திரன் கஜதீபன், சேனாதிராஜா கலையமுதன், சுவீகரன் நிஷாந்தன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த போராட்டத்தினை மிகப்பாரிய அளவில் முன்னெடுப்பதற்காக, இதுவரையில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக நடைபெற்ற அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில் 7 அரசியல் கட்சிகளும், 22இற்கும் மேற்பட்ட சிவில், மத, தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

அதனையடுத்து, ஏற்பாட்டுக்குழுவின் பங்கேற்புடன் மாவட்ட மட்டங்கள் ரீதியாக போராட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதை இலக்காக வைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அக்கூட்டங்களின் போதான பரஸ்பர கலந்துரையாடல்களில், இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் 22ஆம் திகதி முதற்போராட்டத்தை யாழ்மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த தினம் பற்றிய இறுதி தீர்மானம் விரைவில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற அரசியல் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரியும், காணிகள் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரியும் தொடர்போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதுமட்டுமன்றி, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தினை அமுலாக்கப்படுவதை நிறுத்துமாறும் இந்தப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளது. குறித்த போராட்டத்திற்கு, அரசியல்கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன ஆதரவினை வெளியிட்டுள்ள. அதேபோன்று வடக்கு,கிழக்கு வாழ் ஒட்டுமொத்த தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோருகின்றோம் என்றார்.

இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கான ஏற்பாட்டுக்குழுவின் அங்கத்துவான முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவிக்கையில், வடக்கு,கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதேவேளை, அரசியல்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுவரும் ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், தமிழ் மக்களின்  தொன்மையையும்  தேசியத்தையும் சிதைக்கும் வகையில் கலாச்சார  பண்பாட்டு  மற்றும் சமூக விழுமியங்களை சிதைத்து நமது இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும்  வகையில்  சைவ ஆலயங்களை நிர்மூலமாக்கியும்  அங்கு பௌத்த சின்னங்களை நிறுவியும்  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படுகொலையை  எதிர்த்து பாரிய எதிர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரிடையேயும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கான உரிய திகதிகள் விரைவில் அறிக்கப்படும் என்றார்