வடக்கு மாகாண சபையின் கீழுள்ள 4 வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு

வடக்கில் மாகாணசபை ஊடாக நிர்வகிக்கப்படும் 4 வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டிணைந்து எதிர்ப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய மூன்று தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளன.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில், அந்தந்தப் பிரதேச மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவும், தேசிய வைத்தியசாலை மட்டத்திலான உகந்த சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் 20 மாவட்டப் பொதுவைத்தியசாலைகளுள் மாகாணசபைகள் ஊடாக நிர்வகிக்கப்படுகின்ற மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, கம்பஹா மற்றும் அவிசாவளை ஆகிய மாவட்டப் பொதுவைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இம்முன்மொழிவானது தமது அடிப்படைக் கொள்கைகளுக்கும், ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு எட்டப்படும் வரை தற்போது நடைமுறையில் உள்ள மாகாணசபை முறைமை அவ்வாறே தொடர்ந்து பேணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கும் முற்றிலும் முரணானதாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இதுகுறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், அவர்களும் இதனை எதிர்க்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

அதற்கமைய வடக்கில் மாகாணசபை ஊடாக நிர்வகிக்கப்படும் 4 வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மூன்று கட்சிகளும் கூட்டிணைந்து எதிர்ப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.