பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது அதைவிடக் கடுமையான “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்” எனும் புதிய அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகொட குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சட்டத்தின் கீழ், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது கூட பயங்கரவாதச் செயலாக வரையறுக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

உதாரணமாக, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினாலோ அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யக் கோரினாலோ, அவை பயங்கரவாதமாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இது நாட்டைப் பாதுகாப்பதற்கான சட்டம் அல்ல, அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை ஒடுக்குவதற்கான முயற்சி என்று அவர் சாடினார்.

தடுப்புக்காவல் உத்தரவுகளில் கையெழுத்திடும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய புபுது ஜயகொட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசியல் நியமனதாரருக்கு நீதிமன்ற அதிகாரங்கள் வழங்கப்படுவது ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் அவசரகாலச் சட்டம் இல்லாத நிலையிலும், இராணுவம் வீடுகளுக்குள் புகுந்து சோதனை நடத்தும் அதிகாரம் பெறும்.

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஒருவர், எவருடைய கைபேசி மற்றும் குறுஞ்செய்திகளையும் நீதிமன்ற அனுமதியின்றி எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்க முடியும். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படலாம்.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மக்களின் வசதிக்காக அல்ல, மாறாக அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது என்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகொட குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னர் தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் பல தசாப்தங்களாக நீடிப்பதைப் போல, இந்தச் சட்டமும் நிரந்தரமான அடக்குமுறையாக மாறும் என அவர் எச்சரித்தார்.
எனவே, ஜனநாயகத்திற்கு எதிரான இந்தச் சட்டத்தைக் கொண்டுவர மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும், இதை முறியடிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகொட அழைப்பு விடுத்தார்.