மலேசியாவில் அகதிகளை தோட்டத் தொழிலில் பணியாற்ற அனுமதிக்க வாய்ப்பு 

மலேசியா எதிர்கொண்டு வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அந்நாட்டின் தோட்டத் தொழில் துறையில் பணியாற்ற அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்களை தற்காலிகமாக அனுமதிப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில், மலேசியாவில் உள்ள அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் தோட்டத் தொழில் துறை உட்பட எந்த துறைகளிலும் பணியாற்றுவதற்கு தடை உள்ளது எனக் கூறியிருக்கிறார் துணைப் பிரதமரும் தோட்டத்தொழில் துறை அமைச்சருமான பதில்லா யூசப்.

“முன்னதாக அகதிகளை பணியாற்ற அனுமதிக்கும் ஒரு முன்னோடி திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆனால், அத்திட்டம் தோல்வியைக் கண்டது,” எனக் கூறிய துணைப் பிரதமர் யூசப் இந்த விவகாரம் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆராய்வில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

தோட்டத் தொழில் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க தற்காலிக தொழிலாளர்களாக அகதிகளை அனுமதிப்பது குறித்து ஆராய வேண்டும் என மலேசியாவின் மேலவை உறுப்பினர் டோம்னிக் லா ஹோ சாய்  கோரியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.