தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என அபகரிப்பதற்காக செயற்படுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் தெரிவித்தார்.
வாழைச்சேனை கிண்ணியடியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வட்டார எல்லைகளின் எல்லை நிர்ணயத்தை அடையாளப்படுத்தும் பிரேரணை ஒன்று தவிசாளரால் கொண்டுவரப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த பிரதேசம் கடந்த காலத்தில் எல்லை நிர்ணய பிரச்சினை. ஒரு தீர்க்கப்படாத இந்த பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு காணப்படாமல் இந்த எல்லை நிர்ணயங்களை தங்களுக்கு தாங்களே தீர்க்கமாக தீர்மானித்து ஒரு வருமானத்தை நோக்கமாகக் கொண்டு எமது சமூகத்தின் எல்லையை பின்னுக்குத் தள்ளுகின்ற செயற்பாட்டை செய்யக் கூடாது என வலியுறுத்தினேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இதில் எங்களுக்கான ஒரு எல்லை நிர்ணயம் வகுக்கப்படாமல் பிரதேச சபையால் அவர்களாகவே எல்லை நிர்ணயங்களை தயாரித்து அதில் வருமானங்களை அதிகரிக்க வேண்டும் என்பது எதிர்காலத்திலே தமிழ் கிராமங்கள் சுருங்கிப் போகக்கூடிய அளவிற்கு ஆதாரங்களாக அமைந்துவிடும்.
எனவே வாழைச்சேனை வட்டாரம், கறுவாக்கேணி வட்டாரம் என்பது இரண்டு தமிழ் கிராமங்கள். இந்த கிராமங்களிலே தான் இந்த பிரச்சினைகள் இருக்கின்றன. கறுவாக்கேணி வட்டாரம் என்பது வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் வீதியை ஒட்டியதாக அமைந்திருக்கிறது.
ஆனால், அது அடையாளப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக குழப்பங்கள் எழுப்பப்பட்டபோது அவை அனைத்தும் இடை நடுவில் விடப்பட்டது. இந்த நிலையில் பிரதேச சபையின் நிர்வாகம் எதனூடாக கறுவாக்கேணி 10ஆம் வட்டாரத்தை பிரித்து, இது தான் கறுவாக்கேணி 10ஆம் வட்டாரம் என அறிவிக்கப்போகிறது என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது.
கோறளைப்பற்று பிரதேச சபை என்பது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேச சபையாக இருந்தாலும் மக்களுக்கான ஒரு சரியான தீர்வுகளையும் முடிவுகளையும் எடுக்க முடியாமல் இருக்கும் ஒரு பிரதேச சபையாக இருக்கின்றது.



