இலங்கையில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம், தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் – ஞா.சிறிநேசன்

116 Views

இலங்கையில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம்

ஜே.வி.பியினர் இறந்த தங்களுடைய போராளிகளை நினைவுகூருவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் தமிழ் மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்றால் இனவாத அடிப்படையில் இந்த விடயம் பார்க்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,

“இந்த அரசாங்கமானது சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம்,தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் செயற்படுகின்றது. ஜே.வி.பியினர் இறந்த தங்களுடைய போராளிகளை நினைவு கூருவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் தமிழ் மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்றால் இனவாத அடிப்படையில் இந்த விடயம் பார்க்கப்படுகின்றது. இலங்கையில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம், தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம்.

மக்கள் தங்களுடைய இல்லங்களில் இதனை அனுஷ்டிப்பதை அரசு தடுக்க முடியாது. கடந்த நல்லாட்சிக் காலத்தில் நாங்கள் பகிரங்கமாக மாவீரர் தினத்தையும் அன்னை பூபதியின் நினைவு தினத்தையும் தியாகி தலீபனின் நினைவு தினத்தையும் அனுஷ்டித்தோம். இப்போது அவர்கள் அதனை தடுத்து மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றபடியால் மக்கள் தங்கள் வாழிடங்களில் இந்நிகழ்வை அனுஷ்டிப்பதற்குரிய ஒழுங்கை செய்வார்கள். அதனை நிரந்தரமாக அவர்களால் தடுக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு அவர்களால் தொல்லை கொடுக்க முடியும். மீண்டும் அதனை அனுஷ்டிப்பதற்குரிய காலம் கனிந்துவரும்.

அரச ஊழியர்கள் சுமையாக இருக்கின்றார்கள் என்றால் அளவுக்கதிகமாக பாதுகாப்புப் படைகளை நியமனம் செய்துள்ளபடியால் அவர்களுக்கு அதிக செலவினங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. அந்த பாதுகாப்பு செலவீனம் விரலுக்கு மிஞ்சிய வீக்கமாக இருக்கின்றபடியால் அது உண்மையில் அரசுக்கு சுமையாக இருக்கின்றது. 126கோடி மக்கள் உள்ள இந்தியாவிற்கு 13இலட்சம் படைவீரர்களே இருக்கின்றார்கள். அவர்கள் சீனா, பாகிஸ்தானிற்கு எதிராக எல்லைப்போரும் செய்கின்றார்கள்.

ஆனால் 2 கோடி 20இலட்சம் வாழ்கின்ற எமது நாட்டில் ஒரு இலட்சத்தையும் கடந்து 2 இலட்சம் வரை படைகள் இருப்பதென்பது இதுவே அரசிற்கு உள்ள பெரிய சுமை. இதனால்தான் அரசிற்கு அதிக செலவு ஏற்படுகின்றது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்த பாதுகாப்புச் செலவினங்களை குறைப்பதன் மூலமாக மக்களுக்குரிய, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை கொடுப்பதற்கும் அடிமட்ட மக்களை வாழ்விப்பதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும்.

விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் கஸ்டங்களை நாங்கள் விளங்கியிருக்கின்றோம். கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு என பிரதேச வாதம் செய்தவர்கள் இன்று விவசாயிகளையும் இரண்டாக பிரிக்கப் பார்க்கின்றார்கள். விவசாயம் பாதிக்கப்படும்போது அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் பாரிய கசப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தினை சிங்கள மக்களே வெறுக்கும் நிலையில் இங்குள்ள சிலர் தொங்கிக்கொண்டிருப்பதற்கு இந்த அரசாங்கம் தேவைப்படுகின்றது.

அரசாங்கம் மாற்றப்படுமானால் இவர்களின் தலைவிதியும் மாற்றப்படும் என்று அச்சம்கொண்டு சிங்கள மக்களைவிட அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் பிரதிநிதிகள்தான் அரசாங்கத்தினை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக பொருத்தமற்ற கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்துவருகின்றனர்” என்றார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad இலங்கையில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம், தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் - ஞா.சிறிநேசன்

Leave a Reply