இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் சிறுவர்கள் மற்றும் பெரியோர் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
10 சிறுவர்களில் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை செல்பவர்களில் 10 மாணவர்களில் இருவர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ கூறினார்.
தற்போதைய உணவு நெருக்கடியினால் இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அவர் கூறினார்.
உணவு பாதுகாப்பு இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களிலேயே இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாகவும் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் கூறினார்.
இதேவேளை, இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 வீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊட்டச்சத்துகளற்ற, தேவைக்கும் குறைவான அளவு உணவே உட்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் புதிய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் அறிக்கையில், இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு உயர் மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு போகங்களிலும், உணவு உற்பத்தி குறைவடைந்ததால், இலங்கையில் உணவு பாதுகாப்பு குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.