இலங்கை நெருக்கடி: ஒரு நாள் மட்டுமே பெட்ரோல் கையிருப்பு, மின்வெட்டு அதிகரிக்கும் – ரணில் 

ஒரு நாள் மட்டுமே பெட்ரோல் கையிருப்பு

கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்குள் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரம்சிங்க இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்,

  • இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022 ற் ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 3ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன.
  • அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது. இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது.
  • இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன. இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு.
  • இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன. நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
  • மருத்துவ மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
  • இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன்.
  • இதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன்.
  • குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.
  • இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும் , உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே அதனை செய்யவுள்ளது. எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
  • நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை. குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம்.
  • எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .
  • உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Tamil News