பிரச்சினைகளுக்குத் தீர்வு பற்றிய அறிவிப்பு: நோக்கும் போக்கும் – பி.மாணிக்கவாசகம் 

45 Views

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு மூன்று மாதங்களுக்கும் சற்று அதிகமான காலம் இருக்கின்ற சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அவரது கூற்றுக்கமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா? அந்த முயற்சி சாத்தியப்படுமா? எழுபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்கின்ற இனப்பிரச்சினைக்கு இந்த குறுகிய காலத்தில் எவ்வாறு தீர்வு காண்பது? – இது போன்ற கேள்விகள் பலருடைய மனங்களிலும் எழுந்திருக்கின்றன.

நாட்டின் இரு பெரும் தேசிய அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட ஆட்சியை 2015 ஆம் ஆண்டு நிறுவியிருந்தன. அந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பலம் பெற்றிருந்த போதிலும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை.

இப்போது மீண்டும் அவர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்துக்கு முன்னதாக அரசியல் தீர்வு காணப்படும் என அவரே கூறியிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. உண்மையில் அவர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போகின்றாரா அல்லது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போகின்றாரா என்பது தெளிவற்றதாக உள்ளது.

தமிழ் மக்கள் இனப்பிரச்சினையை மட்டுமல்ல. அரசியல் ரீதியாக்த தீரவு காணப்பட வெண்டிய பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகள் எரியும் பிரச்சினைகளதாகத் தொடர்ந்து தகித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு அரசியல் ரீதியாக மட்டுமே முழுமையாகவும் நிரந்தரமாகவும் தீரவு காணப்பட முடியும்.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை பூதாகரமான விவகாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது அரசியல் ரீதியான நடவடிக்கையாகத் தோற்றுகின்ற போதிலும், அதற்கு சட்ட ரீதியான வலு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகததினால் நடத்தப்படுகின்ற விசாரணைகளின் மூலம் கணடறியப்படுகின்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது கண்டறியப்படுகினற உண்மையை ஆதாரமாகக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படமாட்டாது. குற்றவாளிகளாகக் காணப்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கண்டறியப்படுகின்ற உண்மை பயன்படுத்தப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் கண்டறியப்படுகின்ற உண்மை பாதிக்கப்பட்;டவர்களக்குக்கூட தெரிவிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நடத்தகின்ற விசாரணைகளில் உண்மைகள் கண்டறியப்பட்டாலும் அது பயனற்றதாகவே அமையும் என்பது தெளிவு. ஆனால், இந்த விசாரணைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியிருக்கின்றது.

முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவருக்கு இழப்பீடாக வழங்கப்படவிருந்த ஒரு லட்சம் ரூபா இப்போது இரண்டு லட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் பற்றிய தகவல்களைத் துல்லியமாக அறிந்து அதற்கான இழப்பீட்டுத் தொகiயை வழங்குவதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்கே அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்தப் பிரச்சினைக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்பட்டுள்ள அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களும் ஒரு புள்ளியில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது. இரு தரப்பினரும் துருவமயப்படுத்தப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எந்த வகையிலும் நிரந்தரத் தீர்வு காணப்பட முடியாது என்பதே யதார்த்தம். ஆரசாங்கம் இது விடயத்தில் உளப்பூர்வமாக உண்மையை ஒப்புக்கொண்டு இணகப்பாட்டின அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். அது அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகளின விடுதலை பற்றிய பிரச்சினையும் மற்றுமொரு எரியும் பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்பது அசராங்கத்தின் நிலைப்பாடு. சந்தேசத்தின்பேரில் கீழ் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச்சட்டப்படி அவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரமான குற்றவாளிகள் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.

அரசியல் உரிமைக்காகப் போராடிய போராளிகளுக்கு ஆதரவளித்தார்கள் அல்லது உதவினார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களும் சூழ்நிலை ஆதாரங்களுக்கமைய கைது செய்யப்பட்டவர்களும் அரசியல் கைதிகள் என்பதை அரசு முதலில் ,ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு அரசியல் தீர்மானத்தின் ஊடாகப் பொது மன்னிப்பளிக்க வேண்டும்.

அதனைவிடுத்து, அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டில் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டு சட்ட ரீதியாகத்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று பிடிவாதம் பிடிப்பது அழகல்ல. காலத்துக்குக் காலம் இரண்டு பேர் மூன்றுபேர் அல்லது எட்டுப்பேர் ஒன்பது பேர் என்ற வகையில் விடுதலை செய்து பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, அரசியல் ரீதியான பொதுமன்னிப்பின் கீழ் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலமே அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

இதேபோன்று இராணுவத்தினாரால் கையகப்படுத்தப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை முழுமையாக எந்தவித நிபந்தனையுமில்லாமல் திருப்பிக் கையளிக்க வேண்டும். இதற்கு அரசியல் ரீதியாகத் தீர்மானம் எடுத்துச் செயற்பட வேண்டியது அவசியம். அதனை விடுத்து, யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலம் கடந்துவிட்ட நிலையில் தேசிய பாதுகாப்புக்காகத் தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தை நிரந்தரமாக நிலைநிறுத்த, அந்தக் காணிகளை சுவீகரிக்க முற்படுவது நியாயமல்ல.

இடம்பெயர்ந்தோரின் காணிப் பிரச்சினைக்கு அந்த வகையில் இணக்கப்பாட்டுடனான தீர்வாக அது அமையாது. இதேபோன்று பௌத்த மதத்தைச் சாட்டி தொலிலியல் முக்கியத்துவம்  பெற்ற இடங்களில் மத ரீதியாக ஆக்கிரமித்து பௌத்த விகாரைகளைக் கட்டுவதும், பௌத்தர்கள் எவருமே இல்லாத தமிழ்ப்பிரதேசங்களில் பௌத்த மதத்தை நிலைநிறுத்த முற்படுவதும் அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முட்டுக்கட்டையாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலும் மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் இறைமையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கான ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குறிப்பிடுகின்ற சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வாக அமைய வேண்டியதும் முக்கியம் அ;நத வகையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ள அரசியல் தீர்வு முயற்சி அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது எத்தகைய வரையறைகளைக் கொண்டது, அது எத்தகைய அரசியல் வடிவத்தைக் கொண்டது என்ற கோட்பாட்டு ரீதியிலான தெளிவற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் நாட்டின் மூலை முடுக்கு எங்கும் வாழ்கின்றார்கள். அவர்கள் எங்கும் சுதந்திரமாகச் சென்று வருகின்றார்கள் என்ற நிலையில் அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என பேரின அரசியல் தலைவர்கள் இனவாதப் போக்கில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாடு பௌத்த சிங்கள மக்களுக்கே சொந்தமானது என்ற தேசிய கொள்கையை வரித்துக் கொண்டிருக்கின்ற இனவாதிகளே நாடாளுமன்றத்தில் செல்வாக்கு பெற்றிருக்கின்றனர். அவர்களது தயவிலேயே ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அந்த இனவாதிகளின் நிலைப்பாட்டுக்கு முரணான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்கு அடுத்த மூன்று மாத காலத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகின்றார் என்பது பலத்த சந்தேகத்தையே ஏற்படுத்தி இருக்கின்றது.

அவருடைய இந்த முயற்சி நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையையும் கடன் சுமையினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் சர்வதேச மட்டத்தில் தளர்த்தி நிலைமையை சீராக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே பலராலும் நோக்கப்படுகின்றது. அரசியலில் நரிபோன்ற தந்திரசாலி என பெயர் பெற்றிருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளை தனது சந்தர்ப்பவாத அரசியல் தந்திரோபாயச் செயற்பாட்டுக்கான கருவியாகப் பயன்படுத்த முற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

Leave a Reply