திறமையான வீரரை வடக்கு மாகாணம் இழந்துள்ளது- உதைபந்தாட்ட சங்கம் கவலை

428 Views

திறமையான வீரரை வடக்கு மாகாணம் இழந்துள்ளது

திறமையான வீரரை வடக்கு மாகாணம் இழந்துள்ளது: மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உதைபந்தாட்ட வீரர் பியூஸின் மரணச் செய்தி எம்மை துயரமடைய செய்துள்ளதுடன் வடக்கு மாகாணத்திற்கே பேரிழப்பு என வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப பொருளாளருமான அ.நாகராஜன் தெரிவித்தார்.

பியூசின் மரணம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவரும் இலங்கை உதைபந்தாட்ட அணியின் வீரருமான பியூஸ்லஸ் மாலைதீவில் அண்மையில் உயிரிழந்தார். அவரது இழப்பு எமக்கு அதிர்ச்சியையும் வேதனையினையும் அளிக்கின்றது.

உதைபந்தாட்டத்தில் பல நுட்பங்களை கையாண்டு திறமையுடன் விளையாடும் சிறந்த வீரராக அவர் திகழ்ந்தார். இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த இவர், நாட்டிற்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரசிகர்களை கவர்ந்திருந்தார். அதேநேரம் தேசிய அணியில் சிறந்த பின்கள வீரராகவும் விளங்கினார்.

வடக்கை பிரதிநித்துவப்படுத்தி தமிழ்பேசும் வீரர் ஒருவர் தேசியரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு சாதனைகளை ஈட்டிவந்த நிலையில் அவரது தீடீர் மரணச் செய்தி எம்மை துயரடைய வைத்துள்ளது. அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்லாமல் உதைபந்தாட்டத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இழப்பால் வேதனையடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர்களுக்கு வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்ளவதுடன் அவர்களது துன்பத்தில் பங்கெடுத்து நிற்கின்றோம்” என்றுள்ளது.

Tamil News

Leave a Reply