காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் நினைவில்லை : கோட்டாபய நீதிமன்றில் தெரிவிப்பு

அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு நேரில் சென்று, இணையவழி ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

சாட்சியமளித்தபோது, நீண்ட காலம் கடந்துள்ளதால் சம்பவங்கள் தொடர்பான பல விடயங்கள் தனக்கு நினைவில் இல்லை என்று அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கல்கள் தொடர்பில் நேரடியாக தலையிட்டு அறிவுறுத்தல்களை வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் கோட்டாபய ராஜபக்ச மறுத்தார்.

தனது பொறுப்பு அரசாங்கத்தால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பதாக மட்டுமே இருந்ததாகவும், களத்தில் இடம்பெற்ற எந்தவொரு நடவடிக்கையிலும் தான் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், சம்பவங்கள் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்றும், அனைத்து காணாமல்போகும் சம்பவங்களும் தேசிய பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச சாட்சியமளித்தார்.

மன்றில் சாட்சியாளரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சட்டத்தரணி நுவான் போபகே கேள்வி எழுப்பிய போது ஊடகவியலாளர் கீத் நொயார் உங்களுக்கு நினைவிருக்கிறாரா? என்று வினவினார்.

இதற்கு பதில் அளித்த கோட்டாபய ராஜபக்ச ‘நினைவிருக்கிறது. அந்த சம்பவம் ஓரளவுக்கு நினைவிருக்கிறது. ஆனால் விபரங்கள் நினைவில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் குறித்து அப்போதைய காவல்துறை மா அதிபர் மற்றும் மேஜர் ஜெனரல் உள்ளிட்டோருக்கு அறிவித்தமை தொடர்பிலும் சட்டத்தரணி கேள்வி எழுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும் தமக்கு எந்த விடயமும் நினைவில்லை என்று முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதிலளித்துள்ளார்.