எந்தவொரு பிரஜையும் ஆட்சியாளருக்குப் பயந்து வாழ வேண்டியதில்லை – ஜனாதிபதி

இலங்கையில், எந்தவொரு பிரஜையும் ஆட்சியாளருக்குப் பயந்து வாழ வேண்டியதில்லை. ஆட்சியாளருக்கு அடிபணிந்து ஒரு நாடால் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியாளரைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. அத்தகைய சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க என்று தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும்,132 பேர் கொண்ட இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். அதேநேரம், இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இது என்பதுவும் இதன் சிறப்பம்சமாகும்.

தற்போது ஹைட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சீர்செய்து, அந்நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், இலங்கை அரசாங்கம் இந்த வன்முறை ஒழிப்புப் படைப்பிரிவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஹைட்டி நாட்டிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தக் வன்முறை ஒழிப்புப் படையில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 இராணுவ படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 189 அதிகாரிகள் மற்றும் நாட்டின் இராணுவ வரலாற்றில் முதல் முறையாக நிலக்கண்ணிவெடிகள் மற்றும் மரணப் பொறிகளை செயலிழக்கச் செய்வதில் சிறப்புப் பயிற்சி பெற்ற 43 பெண் இராணுவ உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு மேலதிகமாக, கவச வாகனங்கள், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘யுனி பபல்’ரக வாகனங்கள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் வழங்கப்பட்ட 02 சிறப்பு குண்டுதுளைக்காத வாகனங்களும் இந்தப் படைப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

நமது நாட்டின் கீர்த்தியையும் பெருமையையும் முன்னிறுத்தி, உலக அமைதிக்காக மிகவும் முக்கியமானதொரு கடமைக்காக நீங்கள் புறப்படத் தயாராக இருக்கிறீர்கள். இந்த கடமைக்காக நீங்கள் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வது நமது நாட்டின் பெருமையைத் தோள்களில் சுமந்து கொண்டே என்பதை நாம் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.