கிழக்கு மாகாணத்திற்கு உதவி செய்வதாக நியூஸிலாந்து தூதுவர் ஆளுநரிடம் உறுதி

கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் ‘நிலைபேறான பால் பண்ணை திட்டத்திற்கு மேலும் உதவிகளை வழங்குவதாக நியூஸிலாந்து தூதுவர் மைக்கேல் அப்பிள்டன் கிழக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இன்று (16) காலை இலங்கைக்கான நியூஸிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டனிடம் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்தார். இதன் மூலம் மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் நியூஸிலாந்து உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (16) காலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இருவருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு இடம்பெற்ற போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதையடுத்து ஆளுநரின் ஆலோசனைக்கமைய, கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் ‘நிலைபேறான பால் பண்ணை திட்டம்’ நியூஸிலாந்து தூதுவரால் பாராடப்பட்டது. அது தொடர்பில் அவசியமான உதவிகளை வழங்குவதாக, தூதுவர் இதன்போது ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார்.

Tamil News