உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டுவர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பையும் குடிமக்களின் போஷாக்கு நிலையையும் நிறுவுவதில் துல்லியமான தரவுகளைப் பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் கிடைக்கப்பெறும் தரவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வேலைத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தேசிய மட்டத்திலிருந்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் வரை அனைவரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானது என தெரிவித்த ஜனாதிபதி, அரச மற்றும் தனியார் துறையினர் பெரும் பங்காற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், விவசாய நவீன மயமாக்கலில் அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.