2027 இல் புதிய கல்விச் சீர்திருத்தம்: பரீட்சை மையக் கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் தீர்மானம்

பாடசாலை மாணவர்கள் வெறும் மனனம் செய்யும் முறை மற்றும் பரீட்சைகளை மட்டுமே மையமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறையிலிருந்து விடுபட்டு, எதிர்கால உலகிற்குத் தேவையான நடைமுறைத் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப ஆளுமைகளை வளர்க்கும் புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பலாங்கொடையில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைப் பகிரங்கப்படுத்தினார்.

நிகழ்வில் தொடர்ந்து பேசிய பிரதமர், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஆரம்பகட்ட திட்டமிடல்களும், ஆயத்தப் பணிகளும் தற்போது மிகத் துரிதமாக நிறைவடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

உலகை வெறும் ஏட்டுக்கல்வியோடு பார்க்காமல், ஆக்கபூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் பார்க்கக்கூடிய திறமையான பிள்ளைகள் நம்மிடம் உள்ளதாகவும், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்குவதே அரசின் கடமை என்றும் அவர் கூறினார்.

பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும், அவர்களின் உள்ளார்ந்த திறமைகளுக்குப் பொருத்தமான மற்றும் சர்வதேச தொழில் சந்தையில் அதிக தேவையைக் கொண்டுள்ள தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குவது இந்த அரசாங்கத்தின் கட்டாய இலக்காகும் எனப் பிரதமர் உறுதியளித்தார்.

பல்கலைக்கழகக் கல்வியைப் போலவே, தொழிற்கல்வியையும் சமூகத்தில் சமமான மரியாதையும் மதிப்பும் கொண்ட ஒரு துறையாக மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும், இதன் மூலம் புதிய தொழில்நுட்பம் மற்றும் அறிவுடன் கூடிய இளைய தலைமுறையை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டினார்.