பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்தோருக்குப் புதிய நெருக்கடி

பிரித்தானியாவில் நிகர குடியேற்ற எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலான பொதுமக்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவே நம்புவதாகவும் இந்த முரண்பாடான பார்வை புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில், பிரித்தானியாவின் நிகர குடியேற்றம் மூன்றில் இரண்டு பங்கு குறைந்து 2.04 இலட்சமாக பதிவாகியுள்ளது.

“More in Common” அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், 67 வீதமான வாக்காளர்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளதாகத் தவறாக நம்புகின்றனர்.

குறிப்பாக, Reform UK கட்சி ஆதரவாளர்களில் 80 வீதம் பேர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகக் கருதுகின்றனர்.

குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என 74 வீதம் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களிடையே இந்த நம்பிக்கை 17 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் “ஒரு தலைமுறைக்குப் பிறகு மிகப்பெரிய அகதி சீர்திருத்தம்” என்ற பெயரில் கடுமையான சட்டங்களை முன்வைத்துள்ளார்.

அகதிகள் குடியுரிமை பெற 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம், குடும்ப உறுப்பினர்களை மீளச்சேர்ப்பதற்கான கடும் கட்டுப்பாடுகள், அகதிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் என்பவை அவற்றில் உள்ளடங்கும்.

2025 ஆண்டில் சிறு படகுகள் மூலம் வந்த அகதிகள் மொத்த குடியேற்றத்தில் 5 வீதத்துக்கும் குறைவானவர்களேயாவர்.

இருப்பினும், 79 வீதமான மக்கள் இதனையே முதன்மையான சிக்கலாகக் கருதுகின்றனர்.

கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு விசாக்கள் குறைக்கப்படுவது, பிரித்தானியாவின் சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புத் துறைகளை பெரும் நெருக்கடிக்கு தள்ளும் என தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கிம் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.

உண்மை நிலவரம் சாதகமாக இருந்தாலும், மக்கள் மனதில் பதிந்துள்ள பயம் மற்றும் சந்தேகம் காரணமாக புலம்பெயர்ந்தோர் தொடர்ந்து சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.