அமெரிக்கா இலங்கைக்கு விதிக்கவுள்ள புதிய நிபந்தனை

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட தரப்பினருடன் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘அமெரிக்காவுக்கு இலங்கை 16 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது’.
‘இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 23 வீதம் என்பதுடன், இலங்கை பொருட்களை அதிகமாக வாங்கும் நாடாக அமெரிக்காவே இருக்கிறது’.

‘இந்நிலையில் இலங்கை அமெரிக்காவில் இருந்து 370 மில்லியன் டொலர் பெருமதியான பொருட்களையே வாங்குகிறது’ என்று அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இலங்கைக்கு சார்பாக இருக்கும் இந்த வர்த்தகம் தொடர்பில், அமெரிக்காவில் இருந்து அதிகமான பொருட்களை இலங்கை வாங்க வேண்டும் என அமெரிக்காவின் புதிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கலாம்’ என்றும்  அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.

‘குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஆடை ஏற்றுமதி பொருட்களுக்கான பருத்தி ஆடை மூல பொருளை இலங்கை, அமெரிக்காவில் இருந்து அதிகமாக வாங்கலாம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, இராணுவம் மீள்-அழைப்பு, காணாமல் போனோர் அலுவலகம், உண்மை ஆணைக்குழு ஆகிய விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னுரிமை வழங்காமல், முதலில் பொருளாதார சீரமைப்பு என்ற விவகாரத்துக்கே முன்னுரிமை வழங்குகிறது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதன்போது தெரிவித்துள்ளார்.

‘ஆனால், பொருளாதார சீரமைப்பு, தேசிய விவாகரம் ஆகிய இரண்டையும் சமாந்திரமாக முன்னேடுக்கும் படி அரசை கோருகிறோம் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கூறியதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.