NDB வங்கி நிதி மோசடி: நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

தேசிய அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்றுள்ள உள்ளக நிதி மோசடி தொடர்பான நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான  சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுத் தலைவர் எவன் பாபஜார்ஜியோ இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்தச் சம்பவம் அமைப்பு ரீதியான பிரச்சினையாக இல்லாமல், நிறுவன மட்டத்திற்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக” மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

பாரிய நிதி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், குறித்த வங்கி போதுமான மூலதனத்துடனும் பணப்புழக்கத்துடனும் இயங்கிவருவதாக மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. மேலும், வங்கியின் சாத்தியக்கூறு மற்றும் மூலதன விகிதங்கள் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை விட மேலாக உள்ளதால், வங்கியின் நிலைத்தன்மைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில், வங்கியின் மேற்பார்வைச் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடே இந்த மோசடிக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.