பேரினவாதிகளுடன் இணைந்து தமிழ் முஸ்லிம்களைப் பிரித்தாளும் முயற்சியில் நசீர் அகமட்-ஞா.சிறிநேசன் குற்றச்சாட்டு

தமிழ் முஸ்லிம்களைப் பிரித்தாளும்

பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட், பேரினவாதிகளுடன் இணைந்து தமிழ் முஸ்லிம்களைப் பிரித்தாளும் முயற்சியில் முனைப்புக் காட்டிவருவதாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“2020 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலமாக மாவட்ட ரீதியாக 3 உறுப்பினர்களும், தேசியப்பட்டியல் மூலமாக ஒரு உறுப்பினருமாக 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஏற்கனவே இருந்த இரு உறுப்பினர்களை இழந்துள்ளோம். மட்டக்களப்பைப் பொறுத்தமட்டில் மொட்டுக்கட்சியினர் பல்வேறு விதமான தந்திரங்கள் தில்லுமுல்லுகளால் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் வெற்றி பெற வைத்துள்ளனர். ஒருவர் நேரடியாக மொட்டுக் கட்சியில் இருந்தும் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்தும் தெரிவாகியுள்ளனர்.

அதே வேளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மொட்டுக் கட்சியுடன் சங்கமமாகியுள்ளார். இந்த நிலையில் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவான நால்வரும் மிகவும் விழிப்பாகச் செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

கிழக்கின் மண் காவலர்கள் என்று கூறிய ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் இருவர் மட்டக்களப்பில் அரசாங்கத்தின் தமிழர் விரோதச் செயல்கள் எதனையும் தடுக்க முடியாத பொம்மையர்களாக மாறியுள்ளனர். மயிலத்தமடு,மாதவனை, கெவுளியாமடு, நெடியல்மலை,காரமுனை போன்ற இடங்களில் காணி அபகரிப்புகள் நடைபெறும் போது மொட்டுக் கட்சி சார்பான இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனோ, அபிவிருத்திக்குழுத் தலைவர் சந்திரகாந்தனோ,நசீர் அகமதோ மௌனிகளாக இருந்து வருகின்றனர்.காரமுனையில் அயல்மாகாண சிங்களவர்கள் முஸ்லிங்களின் காணிகளை அபகரிக்க வரும்போது நசீர் அகமதைக் காணமுடியவில்லை.

அதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் அவர்கள் மொட்டுக்கட்சி அரசாங்கத்துடன் இணைந்து தனது அரசியலை நடாத்துவதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விரோதத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார்.

காணிக்கள்ளர்கள், நிருவாகப் பயங்கரவாதிகள் என்ற வகையில் தமிழ் மக்கள் சார்ந்தவர்களை மொட்டுப் பலத்துடன் திட்டித்தீர்த்து வருகின்றார். அதாவது பேரினவாதிகளுடன் இணைந்து தமிழ் முஸ்லிங்களைப் பிரித்தாளுவதில் முனைப்புக் காட்டுகிறார்.இந்த நேரத்தில் நசீர் சீறுகின்ற போது மட்டக்களப்பு ஆளுந்தரப்புத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனிகளாக அல்லது தாமிருவரும் இணைந்து செயற்படாமல் உள்ளனர். அதேவேளை கிழக்கு மாகாண காணி அபகரிப்புகள் மண் கொள்ளை அனைத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் போராட்டங்களை நடாத்தி வருகின்றது.மயிலத்தமடு மாதவணை காணி அபகரிப்பைத் தடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

அதே போல கெவுளியாமடு,காரைமுனை அபகரிப்புகள் விடயத்திலும் தமிழ் தேசியக் கூட்மைப்புதான் மக்களுடன் இணைந்து போராடி வருகின்றது. பதவிகளால் பணயக்கைதிகளாகியுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்திலோ,காரமுனை, மைலத்தனை,கெவுளியாமடு விடயத்திலோ அடங்கிப்போயுள்ளனர். அவர்கள் கூறிய வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. மொட்டு அரசாங்கத்தின் கெடுபிடிகள் மத்தியில் தமிழ் தேசிய அரசியலை விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.உள்ளூராட்சி சபைகள், வட்டாரங்கள் மூலமாகவும், கிராமிய மட்டத்திலும் தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டத்துடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பு இணைத்து பணியாற்றியது.வெல்லாவெளி,பட்டிப்பளை, ஆயித்தியமலை, வந்தாறுமூலை, கிரான் போன்ற இடங்களில் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பலத்தை அளித்தது. சிவில் சமூகத்தினர் முன்னெடுத்த P2P போராட்டம், உண்ணா விரதப் போராட்டம், ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்,தொல்லியல் அபகரிப்புக்கு எதிரான போராட்டம்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்,அனைத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்களிப்புச் செய்து வருகின்றது. கொரோனாக்கட்டுப்பாட்டு முடக்கம் காரணமாக எமது போராட்டங்களை மட்டுப்படுத்தப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்களும் உள்ளன. மட்டக்களப்பைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசிய உள்ளூராட்சி சபைகள் பல எதிர்ப்புகள் மத்தியில் முன்பிருந்த பலத்திலும் அதிக பலத்துடன் பாதீடுகளை நிறைவேற்றியுள்ளன. அத்தோடு எமது வாலிபர் அணியினரும் இரத்ததானம்,நிவாரணம்,மரநடுகை,விழிப்பணர்வு என்று  தமது பணிகளை பல்வேறு இடங்களிலும் முனைப்புடன் ஆற்றி வருகின்றனர்” என்றார்.

Tamil News