சிங்கள – பௌத்த மக்களை பாதுகாப்பது எனது பொறுப்பு; பிக்குகள் முன்னிலையில் ஜனாதிபதி உரை

பௌத்த மக்களை பாதுகாப்பது

என்னை இந்த நாட்டின் முதல் குடிமகனாக ஆக்குவதற்கு பல அர்ப்பணிப்புகளை செய்த சிங்கள – பௌத்தர்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பூரண பொறுப்பு எனக்கு உள்ளது. இதற்காக நான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், இந்த நாட்டின் ஏனைய சகோதர மதத்தினரும் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை நான் ஏற்படுத்தியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.

மஹா விஹாரவங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்று “ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண்” பட்டம் வழங்கியது. இதன்பின்னர் அங்கு கூடியிருந்த பௌத்த தேரர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

அந்த உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

“எனது பெற்றோரின் பாரம்பரியத்தால் ஒரு பௌத்தராகப் பிறந்து, நாட்டின் முன்னணி பௌத்த பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நான் பெற்ற பயிற்சி, கல்யாண மித்திர மஹா சங்கத்தினரின் அறிவுரைகளைப் பின்பற்றிய உத்வேகம், இராணுவத்தில் நான் பணிபுரிந்தமையால் பெற்ற ஒழுக்கம் என்பன, எனது வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக மாறக் காரணமாய் அமைந்தன என்பதை இந்நேரத்தில் விசேடமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

இராணுவ அதிகாரியாகவும் பாதுகாப்பு செயலாளராகவும் நான் நாட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, இன்று நீங்கள் என்னை கௌரவிக்கின்றீர்கள். எனது இருபது வருடகால இராணுவச் சேவையின் போது, ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும் இரண்டாம் ஈழப்போரின் போதும், வடக்கு, கிழக்கில் நான் பல முக்கிய பணிகளை செய்தேன்.

இந்திய அமைதி காக்கும் படை வருவதற்கு முன்னர், வடமராட்சி நடவடிக்கையின் நான்கு படைப்பிரிவுகளில் ஒன்றுக்கு நான் கட்டளையிடும் அதிகாரியாகப் பணி புரிந்தேன். இது அப்போது செயல்பாட்டில் இருந்த மிகப்பெரிய நடவடிக்கையாகும்.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமாகிய சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணக் கோட்டையை விடுவிக்க முதல் இரண்டு படைப் பிரிவுகளில் ஒன்றுக்கு நான் கட்டளையிட்டேன். வெலிஓயா, வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் பல முக்கிய பணிகளைச் செய்தேன். அதற்காக ரணசூர (போர்வீரர்) மற்றும் ரண விக்ரம (போர்வீரர்) பதக்கங்களையும் ஜனாதிபதி விருதுகளையும் பெற்றேன்.

பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நேரடியாகப் பங்களித்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நான் பெரும்பான்மை சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்பதை, ருவன்வெலி மஹா சாயவுக்கு முன்பாக ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது அறிவித்தேன். என்னை இந்த நாட்டின் முதல் குடிமகனாக ஆக்குவதற்கு பல அர்ப்பணிப்புகளைச் செய்த சிங்கள பௌத்தர்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பூரண பொறுப்பு எனக்கு உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன்.

இதற்காக நான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், பௌத்த மக்களை பாதுகாப்பது எனது பொறுப்பு. நான் பெற்ற பௌத்த போதனைகளும் உத்வேகமும், இந்நாட்டின் ஏனைய சகோதர மதத்தினரும் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை நான் ஏற்படுத்தியுள்ளேன் என்பதையும் விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.

எனது ஆட்சிக் காலத்தில், நமது புராதன பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு நாங்கள் செயல் ரீதியாக உறுதியளித்துள்ளோம் – என்றும் தெரிவித்தார்.

Tamil News