கடந்த 2017ம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைச் சூழல் காரணமாக சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி இதற்கு முன்பு தஞ்சமடைந்த ரோஹிங்கியா அகதிகள் உள்பட சுமார் 10 இலட்சம் அகதிகள் இன்றைய நிலையில் வங்கதேச அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில், இந்த முகாம்களில் கொலைகள், கடத்தல், பாலியல் வன்முறை, திருட்டு, போதைப் பொருள் வியாபாரம் உள்ளிட்டவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்திருப்பதை வங்கதேச காவல்துறையின் தரவு சுட்டிக்காட்டுவதாக ரொய்டர்ஸ் ஊடகம் குறிப்பிட்டிருக்கிறது. 2022ல் மட்டும் இம்முகாம்களில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளன.
“ரோஹிங்கியா சமூகத் தலைவர்கள் உள்பட தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ள பல கொலைகள் முகாம்களில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஆயுதக்குழுக்கள் பலமடைந்து வருகிறதா என்ற கவலையையும் இது ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் தவறி வருகின்றனர்,” என ரோஹிங்கியா சமூகத் தலைவர் தில் முகமது தெரிவித்திருக்கிறார்.
“ஆபத்தான கடல் பயணங்களில் ரோஹிங்கியாக்கள் ஈடுபடுவதற்கான முக்கிய காரணமாக இது இருக்கிறது,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
2022ம் ஆண்டு படகுப் பயணங்களை மேற்கொண்ட ரோஹிங்கியாக்களில் 358 பேர் உயிரிழந்திருப்பார்கள் என ஐ.நா.அகதிகள் முகமை கருதுகிறது. 2022ம் ஆண்டை பொறுத்தமட்டில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் கடல் வழியாக வேறு நாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
அராக்கன் ரோஹிங்கியா சல்வேசன் இராணுவம் எனும் ஆயுதக்குழுவில் இணையக்கோரி முகாம்களில் இருக்கும் ரோஹிங்கியாக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் இக்குழு மனித கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதே சமயம், இக்குழு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக எந்த சுதந்திரமான ஆதாரத்தையும் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் பெறவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த குழு மியான்மர் இராணுவத்துக்கு எதிராகவும் ரோஹிங்கியாக்களின் உரிமைக்காகவும் போராடுவதை தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
“வங்கதேச முகாம்களில் எந்த குற்றங்களோ சம்பவங்களோ நிகழ்ந்தால், பெரும்பாலான நேரங்களில் அப்பாவி ரோஹிங்கியாக்கள் எங்களது ஆயுதக் குழுவின் உறுப்பினர்கள் என முத்திரைக் குத்தப்பட்டு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்படுகின்றனர்,” என கடந்த டிசம்பர் மாதம் அராக்கன் ரோஹிங்கியா சல்வேசன் இராணுவம் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தங்களுடைய நடவடிக்கைகளை மியான்மரில் மட்டுமே கொண்டிருப்பதாக அக்குழு தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே பெரும் மக்கள் தொகைச் சிக்கலை சந்தித்து வரும் வங்கதேசம், ரோஹிங்கியாக்களின் வருகையால் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாகக் கூறப்படுகிறது. ரோஹிங்கியாக்களை மியான்மர் மீண்டும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வங்கதேச அரசு கூறி வருகிறது. ஆனால் இதற்கு மியான்மர் தரப்பு போதிய ஒத்துழைப்பைத் தருவதில்லை.
முகாம்களுக்கு என தனி காவல்துறை படையணிக் கொண்டு குற்றங்களைத் தடுக்க வங்கதேச அரசு முயன்று வருவதாக வங்கதேச அகதிகள் நிவாரண ஆணையர் மிசனூர் ரகுமான் கூறுகிறார்.
“என்னைப் பொறுத்த வகையில், அராக்கன் ரோஹிங்கியா சல்வேசன் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் குண்டர்கள், மூர்க்கர்கள், நம்பிக்கையற்றவர்கள். இப்போது இவர்கள் போதைப் பொருள் கடத்தலையும் மிரட்டி பணம் பறித்தலையும் நம்பி இருக்கிறார்கள். இவர்களுக்கு என நாடு இல்லை, சமூகம் இல்லை, இவர்களை யாரும் அங்கீகரிக்கவில்லை. அதனால் தான் இவர்கள் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கை என்பது அர்த்தமற்றது,” என வங்கதேச அகதிகள் நிவாரண ஆணையர் மிசனூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைப்படி, முகாம்களில் செயல்படும் வங்கதேச காவல்துறையின் படையணி மிரட்டி பணம் பறித்தல், அராஜகமாக கைது செய்தல், ரோஹிங்கியா அகதிகளை துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 1982 முதல் மியான்மரில் குடியுரிமை மறுக்கப்படுபவர்களாக ரோஹிங்கியா மக்கள் இருக்கின்றனர். இவர்களை வந்தேறிகள் எனக் கூறும் மியான்மர் அரசும் இராணுவமும் ரோஹிங்கியா மக்களை தொடர்ந்து இரண்டாம் தர மக்களாகவும் நாடற்றவர்களாகவும் வைத்திருக்கிறது.