முள்ளிவாய்க்கால் என்பது எங்களுடைய வாழ்வியலாக மாறியுள்ளது – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்

எமது மக்களை நினைவுகூருவதை தடுக்கும் நிலையிலிருந்து நாம் முன்னேறிச்செல்ல வேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் – குறியீடு

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

பதினான்கு ஆண்டுகளாகி போன 2009 ஆம் ஆண்டின் இன அழிப்பின் நினைவு தினத்தை நாளைய தினத்திலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திலே நினைவு கூரப்பட இருக்கின்றது. கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக நிகழ்ந்தது போல இந்த ஆண்டும் சரியாக காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது. எங்களுடைய தமிழ் இனத்தின் விடுதலைக்கான ஒரு புள்ளியாகவும் இந்த இடம் இருக்கிறது.

இந்த மண்ணிலே படுகொலை செய்யப்பட்ட அத்தனை மக்களையும் நாங்கள் நினைவு கூர கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். ஆகவே இந்த நினைவேந்தலை பங்கெடுக்க தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொதுக்கட்டமைப்பின் சார்பாக அழைத்து நிற்கின்றோம்.

இந்த நிகழ்விலே பங்கெடுக்க முடியாதவர்கள் உங்களுடைய இல்லங்களில் மாலையிலே நீங்கள் விளக்கேற்றி இறந்தவர்களுடைய ஆன்மாவிற்காக மன்றாடும்படி கேட்டு நிற்கின்றோம். இறுதி யுத்த காலங்களிலே மக்களுக்கான வாழ்வுக்கு அல்லது உயிரைப் பிடித்துக் கொள்ள காரணமாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நீங்கள் உங்களுடைய இல்லங்களிலே சமைத்து அதனை அருகில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம்.

இவ்வாறான செயற்பாடுகளை, நினைவேந்தல்களை, கஞ்சி வழங்குதல்களை உங்களுடைய இல்லங்களில் மட்டுமல்லாது, ஆலயங்களிலும், சமூக அமைப்புகளிலும், வீதிகளிலும் இவற்றை முன்னெடுக்குமாறு அத்தனை மக்களையும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

இதனை ஏன் நாங்கள் செய்கிறோம் என்பதை எங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும்படியாகவும் அன்புரிமையோடு கேட்டுநிற்கின்றோம். இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு காரணமான அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற அந்த ஒருமித்த குரலில் மக்களினுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய மக்களுக்கான நிர்வாக அல்லது எந்த தாகத்தோடு நாங்கள் போராடினோமோ அந்த தாகங்கள் நிறைவேறும்படியாக நாங்கள் எம்மை அர்ப்பணிப்பதும் அவசியமாக இருக்கிறது.

இன்றும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான இன அழிப்பு விடயங்கள், பௌத்தமயமாக்கல்கள், இவற்றுக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பது அவசியம் என்பதை இந்த வேளையிலே உணர்த்தி இதிலே அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்போடு கேட்டுநிற்கின்றோம்.