பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக் கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அதனையடுத்து அக்கூட்டம் தொடர்பில் இருதரப்பினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.