தென் இலங்கை மீனவர்களின் பொறுப்பற்ற செயலால் முல்லைத்தீவுக்கு ஆபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயாறு பகுதியில் பருவத்தொழிலுக்கு வருகைதரும் தென்பகுதி மீனவர்களால் முல்லைத்தீவு மீனவ சமூகம் பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது.

இங்கு வருகைதரும் மீனவர்கள் இங்கு குடியிருக்க அனுமதி வழங்கப்படாத நிலையிலும் அவர்கள் கடற்கரை பகுதிகளில் வாடிகளை அமைத்து அங்கு சடடவிரோதமாக தங்கியிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை மிக பாரதூரமான விளைவுகளை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது

தற்போதைய கொரோனா அபாய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்றுப் பகுதியில் அதிகளவான தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் மிகவும் நெருக்கமாக எதுவித சுகாதார கட்டுப்பாடுகளும் இன்றி குடியிருக்கின்றார்கள்.

இவர்களில் 28 பேருக்கு  கடந்த 29 ஆம் திகதி  பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்  5 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது   உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று அவர்களை கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக சுகாதர பிரிவினர் பேருந்தினை கொண்டு சென்றபோது அவர்கள் மருத்துவமனை செல்ல மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர். இதையடுத்த கட்டாயப்படுத்தி குறித்த 5 நபர்களையும் சுகாதாரப்பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை இன்று குறித்த பகுதியில் அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்தபோதும் அதற்கும் குறித்த பகுதி மக்கள் ஒத்துழைக்கவில்லை. பல்வேறு சிரமங்களின்  மத்தியில்  74 பேருக்கு  மட்டுமே பி.சி. ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடிந்ததாக முல்லைத்தீவு மாவட்ட   பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  எம்.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு  இதுதொடர்பில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர்,   “குறித்த பகுதியில்  சுமார் 700 வரையாலானவர்கள் மிகவும் நெருக்கமாக வசித்து வருகின்றார்கள்.

இவர்கள் தொடர்பான எந்தவித பதிவுகளும் இங்கு இல்லை. இவர்களை இனம்காண்பது பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது என அனைத்து விடயங்களிலும் பாரிய சவால் உள்ளது.

இதனை விட மாகாணங்களுக்கிடையிலான  பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த பகுதியில் இருந்து கடந்த 28  ஆம் திகதி 30 பேர்  பேருந்து ஒன்றின் ஊடாக முடக்கப்பட்ட புத்தளம் மாவடடத்தில் உள்ள அவர்களின் ஊருக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீண்டும் இந்த இடத்திற்கு வர அனுமதிக்கப்பட கூடாது.

இதேவேளை குறித்த பகுதியில் கடற்தொழிலுக்காக யார்,எவர்,எத்தனை பேர் வந்து நிக்கின்றார்கள் என்ற விபரங்கள் எதுவும் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடமும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இதனால்  முல்லைத்தீவின் கரையோர பகுதிக்கு மாத்திரமின்றி மாவட்டத்துக்கே பாரிய ஆபத்து  உருவாக்கி உள்ளது. குறித்த நபர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடியுள்ளனர். இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு என  சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 தென் இலங்கை மீனவர்களின் பொறுப்பற்ற செயலால் முல்லைத்தீவுக்கு ஆபத்து

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 தென் இலங்கை மீனவர்களின் பொறுப்பற்ற செயலால் முல்லைத்தீவுக்கு ஆபத்து