முல்லைத்தீவு- வளங்கள் சுரண்டப்படுகின்றதை ஏற்க முடியாது -க.சிவநேசன்

85 Views

முல்லைத்தீவு மாவட்ட வளங்கள் சுரண்டப்படுவதை வன்மையாக எதிர்ப்பதாக முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

துணுக்காய் மல்லாவி யோகபுரநாதர் ஆலயத்தில் நேற்று (06) நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  துணுக்காய் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வளங்கள் சுரண்டப்படும், அழிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.

குறிப்பாக காணிகள் அபகரிக்கப்படுவதும் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு தலங்கள் பௌத்த மயமாக்கப்படுவதும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயம் உட்பட ஒட்டுமொத்த குருந்தூர் மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தமிழர்களின் காணிகளை சட்டவிரோதமாக தொல்லியல் திணைக்களம் சுவீகரிக்கும் நடவடிக்கையினை நான் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றேன்.

மேலும், தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள பௌத்த பேரினவாதம் சட்டவிரோதமாக அபகரிப்பதை எமது முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் பார்த்துக்கொண்டிருக்க கூடாது. சுயமாக முன்வந்து எமது மாவட்டத்தையும் மாவட்டத்தில் உள்ள வளங்களையும் பாதுகாக்க பழகிக்கொள்ள வேண்டும்.

நாட்டை கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்து பல்வேறு மனித உரிமை மீறல்களை செய்துவந்த கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து எமது முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் எமது அரசியல் கட்சியுடன் சேர்ந்து அவர்களுக்கு எதிரான ஆட்பாட்டத்தை முள்ளியவளை நகரில் செய்ததை நான் பாராட்டுகிறேன்.  அதன் விளைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனது பதவியை துறந்து பொதுமக்களுக்கு பயந்து நாட்டைவிட்டு ஓடிய சம்பவமும் நடந்தவையே

அதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் எமது மாவட்ட மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும் இளைஞர், யுவதிகளின் எதிர்கால நலன்களுக்காகவும் நாம் பல்வேறு செயற்பாடுகளை முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இளைஞர்களை ஒன்றிணைந்து நிர்வாக மயப்படுத்தி செயற்படுத்தி வருகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நலன்களுக்காக எமது அரசியல் பணி தொடரும் என்று தெரிவித்தார்.

Leave a Reply