ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருமாறு கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தகவல் கிடைத்தும் அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல்போயுள்ளது. இது விடயத்தில் தனது இயலாமை மற்றும் கவனயீனத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.

அத்துடன், அரசாங்க பலத்தை பயன்படுத்தி தமது தரப்பில் இழைக்கப்பட்ட தவறை மறைப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியிடம் கோருகின்றோம். அவ்வாறு கொண்டுவந்தால் எங்கு தவறிழைக்கப்பட்டது என்பது உட்பட அனைத்து தகவல்களும் தெரியவரும்.

தேசிய மக்கள் சக்தியில் மனசாட்சியின் பிரகாரம் செயல்படும் எம்.பிக்களும் அதனை ஆதரிக்கக்கூடும். அப்போது அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் ஆட்டம் காணும் எனவும் அவர் தெரிவித்தார்.