வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இதுவரை 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அகற்றம்

59 Views

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 8 இலட்சத்து 70 ஆயிரத்து 412 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்ணிவெடிகளை அகற்றும் அவசர வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 870,412  சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 ராணுவ டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், வெடிக்காத 3 லட்சத்து 65 ஆயிரத்து 403 ராணுவ வெடி பொருட்களும், 11 லட்சத்து 84 ஆயிரத்து 823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அதன்படி, ஜூன் 2027ஆம் ஆண்டுக்குள், இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.

இந்த நிலையில், “கண்ணிவெடிகளை அகற்றும் அவசர வேலைத்திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற முடியும்” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கிறார்.

கண்டெடுக்கப்படும் நிலக் கண்ணிவெடிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய ராணுவ வெடி பொருட்கள் – பொதுமக்களின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக, ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் தினந்தோறும் வெடிக்கச் செய்து அழிக்கப்பவதாக மீள்குடியேற்றப் பிரிவு குறிப்பிடுகிறது.

Leave a Reply