தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்படும் 600 ஆவணங்களற்ற குடியேறிகள் 

Myanmar Migrants 1 தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்படும் 600 ஆவணங்களற்ற குடியேறிகள் 

தாய்லாந்தின் ரனோங் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்கள் மூன்று கட்டங்களாக மியான்மருக்கு திரும்புவார்கள் என தாய்லாந்தில் உள்ள மியான்மர் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும் இவர்களை திருப்பி அனுப்பும் பணி இன்று முதல் தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

தாய்லாந்து அதிகாரிகளின் கூற்றுப்படி, மியான்மரிகள் அனைவரும் ஆவணங்களின்றி நாட்டுக்குள் நுழைந்து தெற்கு தாய்லாந்து பகுதியில் வசித்து வந்தவர்கள் ஆவர்.

முந்நூறு பேர் மட்டுமே தங்கக்கூடிய அறையில் 600க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்கள் மோசமான சூழலுக்குள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தங்கள் அனைவரையும் மியான்மருக்கு மாற்றக்கோரி தடுப்பு முகாமில் மியான்மரிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் தூதரக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மியான்மரில் நிலவி வரும் இராணுவ ஆட்சியின் காரணமாக, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக மியான்மரிகள் தஞ்சமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா மக்கள் தொடர்ந்து படகு வழி தஞ்சக்கோரிக்கைப் பயணங்களில் ஈடுபட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.