லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

லெபனானில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

2006 போருக்குப் பிறகு ஆயுதக் குழு கட்டமைத்த உள்கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் 1,300 ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹிஸ்புல்லா 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வடக்கு இஸ்ரேலில் ஏவியது என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இராணுவ, விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த ஏவுகணைகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகள் அமைந்துள்ள தெற்கு, கிழக்கு லெபனானில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இஸ்ரேல் காசா மீது கடந்த அக்டோபர் தொடங்கி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது சுதந்திரமான பாலஸ்தீன மண்ணுக்கு ஆதரவாக இயங்கும் ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லாக்களை எதிர்த்து தற்போது லெபனான் மீதும் தாக்குதலை வலுப்படுத்தி வருகிறது இஸ்ரேல். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் வலுப்பெற்றுள்ளது.