தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள்

தெற்கு தாய்லாந்தில் சிறைப்படுத்தப்பட்டு இருந்த 210 மியான்மர் புலம்பெயர் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் கடந்த நவம்பர் 21ம் திகதி படகு வழியாக திரும்பியுள்ளனர். இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தெற்கு தாய்லாந்தில் இருக்கும் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் ரனோங்யில் (தாய்லாந்து தெற்கு மாகாணம்) உள்ள குடிவரவுத் தடுப்பு முகாமிலிருந்து மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். ரனோங்யிலிருந்து  மியான்மரின் கவ்தவுங் பகுதிக்கு புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாட்டை மியான்மர் தரப்பு தூதரக அதிகாரி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் மியான்மரில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் Pan Khin திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வருவதால் தாய்லாந்துக்கு செல்லும் மியான்மர் தொழிலாளர்கள் சட்ட ரீதியாக செல்லுமாறு மியான்மர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழையும் மியான்மர் புலம்பெயர் தொழிலாளர்கள் தாய்லாந்து சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நாடுகடத்தப்படுகின்றனர். அந்த வகையில், இது நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட முதல் நாடுகடத்தல் நடவடிக்கையாகும்.