ரஸ்யா மீது மேலும் தடைகள் – ஜி-7 மாநாட்டில் தீர்மானம்

128 Views

ரஸ்யாவின் தங்கத்தின் ஏற்றுமதியை தடை செய்வதுடன், எண்ணை எற்றுமதிக்கான விலையை நிர்ணயிப்பது என்பன தொடர்பில் இந்த வாரம் ஸ்பெயினில் இடம்பெற்ற ஜி-7 நாடுகளின் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஸ்யா மீது மேற்குலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 26 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரையிலும் இடம்பெற்ற மாநாட்டில் உலக விடயங்களை தவிர்த்து ரஸ்யா தொடர்பான விடயங்களே முதன்மைப்படுத்தப்பட்டன.

ரஸ்யாவின் தங்கத்தின் மீது அமெரிக்கா விதித்த தடையில் பிரித்தானியா, யப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகள் உடனடியாக இணைந்துள்ளன. ஆனால் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் பின்னர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ரஸ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் தங்க ஏற்றுமதியில் 9.2 விகிதத்தை ரஸ்யா உற்பத்தி செய்கின்றது. எனவே தங்கம் மீதான தடை உலகில் தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்யும்.

ரஸ்யாவின் எண்ணை ஏற்றுமதிக்கு விலைக்கட்டுப்பாடு கொண்டுவருவது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டதுடன், ரஸ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் மற்றும் உரவகைகளுக்கு தடையில்லை என்பதுடன், உக்ரைனில் இருந்து தானியங்களை எவ்வாறு ஏற்றுமதி செய்வது என்பது தொடர்பிலும் பேசப்பட்டது.

இதனிடையே, ரஸ்யாவின் தானிய ஏற்றுமதி இந்த வருடம் 50 மில்லியன் தொன்களாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் அது 37 மில்லியன் தொன்களாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில் ரஸ்யா சிந்தித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply