வெளிநாடுகளில் மீள்குடியமர்த்தப்பட்ட ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகள் 

நவுருத்தீவில் செயல்பட்டு வந்த அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த 10 அகதிகள், அமெரிக்கா மற்றும் நோர்வேயில் மீள்குடியமர்த்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில்  9 அகதிகள் அமெரிக்காவிலும் 1 அகதி நோர்வேயிலும் மீள்குடியமர்ததப்பட இருக்கின்றனர்.

அதே சமயம், நவுருதீவில் மேலும் 160 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 8 ஆண்டுகள் அத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பப்புவா நியூகினியா தீவிலும் அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடங்களிலும்  மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றனர்.

அமெரிக்கா- அவுஸ்திரேலியா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், இதுவரை 400க்கும் மேற்பட்ட அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படும் 9 அகதிகளில் 3 அகதிகள் கொரோனா தொற்றினால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த டெக்சாஸ் மாநிலத்தில் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர்.

“அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இந்த அகதிகள் மீள்குடியமர்த்தப்பட வாய்ப்பு இருக்கும் போது, நிச்சயத்தன்மையற்ற எதிர்காலம் கொண்ட அமெரிக்காவுக்கு இன்னும் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு அனுப்புவது அதிர்ச்சியாக உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார் Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் ஐன் ரிண்டோல்.