அமைச்சர்களின் கொடுப்பனவுகளை நிறுத்தி அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும்-பா.அரியநேத்திரன்

21 60a187e2ab98e அமைச்சர்களின் கொடுப்பனவுகளை நிறுத்தி அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும்-பா.அரியநேத்திரன்

அரசாங்க துறையினரின் சம்பளத்தை குறைக்காமல் அமைச்சர்களின் கொடுப்பனவுகளை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்குவதே நல்லது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, அரச ஊழியர்களின் சம்பளத்தை வெட்டி கொரோனாவால் நாடு முடக்கப்படும் போது மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்த  கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கையில் பா.அரியநேத்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் “நாட்டில் மிக மோசமாக கொரோனா தொற்று ஏற்படும் நிலையில் அது ஏனய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தவர்கள் வைத்திய நிபுணர்களே. அவர்களில் ஆலோசனையை அமுல்படுத்தாமல் காலம் கடத்தியமையால் அதனை செய்யுமாறு பல்வேறு சுகாதார அமைப்புகள், எதிர்கட்சிகள், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத தலைவர்கள், தொழிற்சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இறுதியில் பௌத்த மகாசங்கங்கங்களின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை உதாசீனம் செய்ய முடியாமல் தற்போது நாடு முடக்கப்பட்டுள்ளது.

நாட்டை முடக்கினால் அந்த நாட்டில் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கும், அன்றாடம் கூலிவேலை செய்யும் தொழிலாளர குடும்பங்களுக்கும், தொழிலை இழந்த குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்தை ஈடு செய்து கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை.

அதற்காக அரசாங்க அலுவலரகள் ஊழியர்களின், அதிபர் ஆசிரியர்களின் மாத வேதனத்தில் கைவைப்பது அவர்களை நட்டாற்றில் தள்ளுவதற்கு சமனாகும்.

தற்போதய அரசில் பல அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என எண்ணற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இராஜாங்க அமைச்சர்கள் விரைவில் புதிதாக நியமிக்கப்படவும் உள்ளனர்.

இவ்வாறான சகல அமைச்சர்களினதும் கொடுப்பனவுகளை குறைந்தது மூன்று மாதங்களுக்கு நிறுத்தி அந்த கொடுப்பனவுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதே மிக நல்ல விடமாகும்.

இதைவிட நிதி அமைச்சர் பசீல் ராஜபக்ச அவர்கள் கொரோனா ஒழிப்பு செயலணிக்காக நூற்றுக்கணக்கான வாகனங்களை கொள்வனவு செய்யப் போவதாகவும் அண்மையில் செய்தி வெளிவந்தன. அது உண்மையாயின் அந்த வாகன கொள்வனவுகளை நிறுத்தி அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடியும்.

பல அமைச்சர்கள் மாவட்டங்கள் தோறும் அடிக்கடி சென்று கள விஜயங்களை மேற்கொள்வதால் வீணான பிரயாணச் செலவுகள் ஏற்படுகின்றன அப்படியான பிரயாணங்கள் நிகழ்வுகளை மூன்று மாதம் நிறுத்தினால் பெரும் தொகை நிதி மிச்சமாகும் அந்த பணத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கலாம்.

இதைவிட வடக்கு கிழக்கு மகாணங்களில் மணல் அகழ்வில் ஈடுபடும் வியாபாரிகள் பெருமளவான தொகைகளை முகவர்கள் ஊடாக பல ஆளும்கட்சி அரசியல் வாதிகளுக்கு மறைமுகமாக மாதாமாதம் வழங்கிவருவதாக தெரிகிறது. அவ்வாறான நிதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு பல தரப்பட்ட முறைகளில் நிதிகளை பெறும் உபாயம் உள்ளபோது எடுத்த எடுப்பில் அரச ஊழியர்களின் வயிற்றில் அடிக்க அரசு திட்டமிட்ட செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

நாளும் விலைகளை கூட்டிக் கொண்டு அன்றாடம் எந்த தொழிலும் இல்லாத மக்களுக்கு அரசு கட்டாயம் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் அதற்காக அரச ஊழியர்களின் மாதவேதனத்தில் கைவைப்பதை நிறுத்தி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை குறைத்து அவர்களுக்கு மில்லியன் கணக்கில் மாதாமாதம் வழங்கும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதே மிகச் சிறந்த நடைமுறை”  என்றார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021