பாலர் பாடசாலை பிள்ளை போல் நீதி அமைச்சர் கருத்தினை வெளியிடுகிறார்-அருட்தந்தை மா.சத்திவேல்

391 Views

பாலர் பாடசாலை பிள்ளை போல் நீதி அமைச்சர்

பாலர் பாடசாலை பிள்ளை போல் நீதி அமைச்சர் வெளியிடும் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

நீதி அமைச்சர் அலி சப்ரி கடந்த ஞாயிறு (13.02.2022) பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியிருந்த தனிப்பட்ட பேட்டியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் , யுத்தம் தொடர்பிலும் உண்மைகளை வெளிப்படுத்தி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ள விடயத்தினை சர்வதேச சமூகம் ஏற்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதோடு தமிழர்கள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.   அவரின் கூற்று தமிழர்களை தொடர் போராட்டத்திற்கே தள்ளியுள்ளது எனலாம்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஆட்சியாளர்களின் “நீதிக்கான அணுகுதல்” வேலைத்திட்டம் மூலம் சர்வதேசத்தின் கண்களில் மண்ணைத்தூவ எடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது.

இதுவரை காலமும் ஆட்சியாளர்கள் வடக்கில் “யுத்தம் நடைபெறவில்லை அங்கு நடந்தது மக்களை மீட்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையே”எனக் கூறிக் கொண்டிருந்தனர்.ஆனால் நீதியமைச்சர் யுத்தம் நடைபெற்றது என்பதை உறுதியாக்கியுள்ளார்.

இராணுவத்தில் காணாமல் போனதை போன்று விடுதலைப் புலிகள் தரப்பிலும், தமிழர் தரப்பிலும் என பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்கின்றார்.

ஆட்சியாளர்களால் முற்றாக அழிக்கப்பட்டதாக கூறும் விடுதலைப்புலிகளிடம் இனி விசாரணை நடத்த முடியாது. நீதி அமைச்சரின் ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யுத்தத்தை தொடர்ந்த படை அதிகாரிகள் தற்போது உயர் பதவிகளில் உள்ளதோடு அரசியல் வாதிகளாகவும் உள்ளனர். அவர்களை உயர் நிலையிலிருந்து நீக்கி விசாரிக்க வேண்டும்.

ஆனால் சிங்கள மக்கள் இராணுவத்தை குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதில் இருந்து உள்ளக விசாரணை என்பது ஏமாற்று நாடகம் என்பது தெளிவாகின்றது. இதனால் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை அவரின் கூற்று மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் “உங்கள் உதவிகளும், சலுகைகளும், மரண சான்றிதழ்களும் எங்கள் உயிரான உறவுகளின் உயிருக்கு ஈடாகுமா? அவர்களுக்கு என்ன நடந்தது? மரண சான்றிதழ் வழங்க முன்வரும் நீங்கள் அவர்கள் மரணம் அடைந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மரணத்திற்கு அல்லது கொலைகளுக்கு யார் காரணம்? என கேட்பதை நீதியமைச்சர் அரசியல் எனக்கூறி ஆட்சியாளர்களின் அரசியலை மறைக்க முயல்கின்றார்.

உங்கள் சுதந்திர காலத்திலிருந்து இன அழிப்பையும் அதனையே 30 வருட காலமாக யுத்தத்தமாகவும் நடாத்தியதும் காணாமலாக்கப்பட்டதும் பேரினவாத அரசியல் காரணமாகவே. தமிழ் தலைமைகளோடும், இயக்கங்களோடும் எத்தனையோ கட்ட பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் இவற்றையெல்லாம் கிழித்தெறிந்து இன அழிப்பை தொடர்ந்ததோடு ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் 13+ சர்வதேசத்தை ஏமாற்றியது யார்? இவற்றையெல்லாம் மறந்து பாலர் பாடசாலை பிள்ளை போல் நீதி அமைச்சர் வெளியிடும் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேறுயமைக்கு அடக்குமுறை இன அழிப்பு யுத்தமே காரணம். அவ்வாறு வெளியேறியோர் முன்வைக்கும் நீதிக்கான கோரிக்கையினை “கூப்பாடு ,கூச்சல்” என்றும் “கத்தி கொண்டிருக்கின்றார்கள்” என்றும் அவமானப்படுத்தியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தியதாகவே கொள்ளல் வேண்டும்.

நீதி அமைச்சரின் செவ்வி தமிழர்களை பலமான போராட்டத்திற்கு தள்ளியுள்ளது. இதனோடு நிதியமைச்சர் வட கொரியாவில் இருந்து யுத்தத்திற்கான ஆயுதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது என்னும் கூற்றையும் அடிப்படையாக வைத்து ஐநா மனித உரிமைப் பேரவை சர்வதேச சக்திகளின் அரசியலுக்குள் சிக்கி விடாது தொடர்ந்து இனஅழிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு உட்படுத்தவும் , சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்தவும் அரசியல் தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.Tamil News

Leave a Reply