எதிர்க்கட்சியின் நல்ல யோசனைகளை ஏற்கத் தயார் – அமைச்சர் தம்மிக படபெந்தி கருத்து

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சிறந்த யோசனைகளை ஏற்றுக்கொள்வோம். குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வரவு – செலவுத் திட்ட மீதான விவாதத்தில் உரையாற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் மாத்திரமே முன்வைக்கிறார்கள். கடந்த அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தையே செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள். எதிர்கட்சியில் உள்ள ஒருசில  முற்போக்கான உறுப்பினர்களின் கருத்துக்களும் அதிருப்திக்குரியது.

இந்த வரவு – செலவுத் திட்டம் எளிமையான வகையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெருந்தோட்ட மக்களை கவனத்திற் கொள்ளாதவர்கள் தற்போதைய சம்பள அதிகரிப்பு  தொடர்பில் மாறுப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி, நகர உட்கட்டமைப்பு உள்ளிட்ட சகல துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.குற்றச்சாட்டுக்களை மாத்திரம்  முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் சிறந்த விடயங்களை கவனத்திற்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சிறந்த யோசனைகளை ஏற்றுக்கொள்வோம். குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

நிலையான பொருளாதார மீட்சி இந்த வரவு – செலவுத் திட்டத்தின் பிரதான இலக்காகும். எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதை போன்று  வரையறையற்ற வகையில் நிதி ஒதுக்கியிருந்தால் ‘பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஏன் இவ்வாறு நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடுவார்கள். வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை சிறந்த முறையில் செயற்படுத்துவோம் என்றார்.