யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தை சுற்றுலா பிரதேசத்தின் முக்கியமான மைய பிரதேசமாக மாற்றுவதாக இருந்தால் அதற்கான போக்குவரத்து ஸ்தானங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
இதில் முதலாவது பலாலி விமான நிலையம் முக்கியமானது.
இந்தியா இதனை அபிவிருத்தி செய்ய தயாராக இருந்தாலும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அந்த உதவியை பெற்றுக்கொள்ள தயங்குகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“மூன்று கட்டமாக அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா இணங்கியிருந்தது”.
“இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் அவர்கள் வர தயாராக இருக்கின்றனர்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
“இதற்காக முதலாவதாக அங்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும். இராணுவ எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்”.
“அவ்வாறு கணிசமான மாற்றம் ஏற்பட்டால் எமது மண்ணை சார்ந்த மக்களே யாழ்ப்பாணத்திற்கு வந்து முதலீடுகளை செய்து பொருளாதார இருப்புகளை முன்னேற்றலாம்“ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



