ஜனநாயக போராட்டங்களை திசைதிருப்பும் முயற்சியே இராணுவ களமிறக்கமாகும்-  கலாநிதி இரா.ரமேஷ்

279795155 5005934462828217 7622416708232655272 n ஜனநாயக போராட்டங்களை திசைதிருப்பும் முயற்சியே இராணுவ களமிறக்கமாகும்-  கலாநிதி இரா.ரமேஷ்

இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான தரப்பினர் மேற்கொள்ளும் போராட்டங்களை கண்டும் காணாதது போல நடந்து கொள்ளும் பாதுகாப்பு படையினர் அகிம்சை ரீதியில் செயற்படும் இளைஞர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு முனைகின்றனர்.

இந்த அநாகரிக நிலை கண்டிக்கத்தக்கதாகும். அத்துடன் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவத்தினரை களமிறக்கியுள்ளமை பொருத்தமான விடயமல்ல. ஜனநாயக ரீதியில் இடம்பெறும் போராட்டங்களை வேறு திசைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியே இதுவாகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.இரமேஷ் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் இன்று அரசாங்கமொன்று இல்லாத நிலையில் அராஜக சூழல் மேலெழுந்துள்ளது. சட்டம் ஒழுங்குகள் சீர்குலைந்துள்ளதால் மக்கள் அதிகாரங்களை கையில் எடுப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மரபு ரீதியான அரசியல் தலைமைகள் மீது முற்றாக மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

இத்தகைய ஒரு சூழலிலேயே அமைதியைப் சீர்குலைக்கும் வகையில் அரசாங்க தரப்பினரால் வன்முறை ஏவிவிடப்பட்டது. அந்த வன்முறையால் அகிம்சை வழியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிய இளைஞர்கள் ஆத்திமடைந்தனர். இதன் வெளிப்பாடே பொது சொத்துக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் மீதான சேதங்களுக்கு அடித்தளமிட்டது. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் இதனால் உக்கிரம்டைந்தன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக பொலிஸாரை சார்ந்ததாகும். இதிலிருந்தும் தவறியுள்ள பொலிஸார் தமது கடமையில் இரட்டை வேடத்தை கொண்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு ஆதரவான தரப்பினர் செய்கின்ற போராட்டங்களை  பொலிஸார் கண்டும் காணாதது போல இருப்பதையும்,  இளைஞர்களின் அகிம்சை வழிப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு அல்லது ஒடுக்குவதற்கு பல்வேறு கைங்கரியங்களை மேற்கொள்வதையும் காணமுடிகின்றது. இந்த அநாகரிக நிலை கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த நிலையில் சுமுகமான சூழலை ஏற்படுத்தும் பாணியில் இராணுவத்தினரை அரசாங்கம் களமிறக்கியுள்ளது. சட்டத்தை மீறி செயற்படுவோரை சுட்டு வீழ்த்துமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் இடம்பெறும் போராட்டங்களை வேறு திசைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியே இதுவாகும். ஜனநாயக ரீதியான போராட்டத்தை இராணுவத்தை களமிறக்கி  அரசாங்கம் கட்டுப்படுத்த முனையுமானால் மிகப் பாரிய அழிவொன்றை இலங்கை சந்திக்க வேண்டி நேரிடும் என்பதை நினைவூட்ட வேண்டியுள்ளது. இலங்கையின் இன்றைய பிரச்சினை இராணுவத்தை பிரயோகித்து தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையல்ல. ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி கலந்துரையாடலின் மூலமாகவே இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பினை வழங்க வேண்டிய இராணுவம் நிலைமாறி செயற்படுமாக இருந்தால் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் இளைஞர்களின் ஆவேசம் அதிகரித்துள்ள நிலையில் இராணுவ களமிறக்கம் என்பது சொல்ல முடியாத ரணங்களை நாட்டிற்கு ஏற்படுத்தக்கூடும்.

இளைஞர் எழுச்சி பல்வேறு விளைவுகளுக்கும் இட்டுச் செல்லக்கூடும். எனவே இராணுவம் தனக்குரிய வட்டத்தில் இருந்து மட்டுமே செயற்பட வேண்டும். அரசாங்கத்திற்கு சார்பான தரப்பினரும் இனவாதிகளும் வன்முறைகளை தூண்டி வருகின்றனர். இத்தகையோர்களை இனங்கண்டு தடுக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர்  ஈடுபட வேண்டும். இதைவிடுத்து சிவில் மக்களின் போராட்டங்களை ஒடுக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இது எதிர்க்கணிய விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.

Tamil News