மத்திய கிழக்கு நெருக்கடி: சுற்றுலாப் பயணிகள் ,புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் சிறப்பு வேலைத்திட்டம்

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராய்வதற்கும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தேவைகளை கவனிப்பதற்கும் அரசாங்கம் விசேட  நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (01-03-2026) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தற்போது நாட்டிற்குள் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களது விசா காலத்தை எவ்வித கட்டணமுமின்றி இரண்டு வாரங்களுக்கு (14 நாட்கள்) நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேவைப்படின் இதனை மேலும் நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராயவும் வெளிவிவகார  அமைச்சின் ஊடாக அந்தந்த தூதரகங்களுடன் கலந்துரையாடி முறையான வேலைத்திட்டமொன்றை உடனடியாகத் தயாரிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.