அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது உயர்மட்டக் கூட்டத்தொடரில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு மிகவும் நேர்மறையான மற்றும் கட்டமைப்புமிக்க சூழலில் நடைபெற்றதாக வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மீட்பு மற்றும் சீர்திருத்த வேலைத்திட்டங்கள், அத்துடன் தேசிய நல்லிணக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அதிக ஆதரவை வழங்கும் நோக்குடனான சர்வதேச நிதிக் கட்டமைப்பின் சீர்திருத்தங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை வழங்கும் பங்களிப்பு தொடர்பிலும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் டித்வா’ (Ditwah) புயலை தொடர்ந்தும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், பொருளாதார நிலைத்தன்மையை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் தமது பாராட்டுக்களையும் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.



