இலங்கையில் தீவிரமடையும் மருத்துவத்துறை நெருக்கடி பேரவலமாக மாறும் அபாயம்

384 Views

இலங்கையில் தீவிரமடையும் மருத்துவத்துறை நெருக்கடி

இலங்கையில் தீவிரமடையும் மருத்துவத்துறை நெருக்கடி நிலை பேரவலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, தற்போது உயிர்காக்கும் மருத்துவத்துறையையும் பெருமளவில் பாதித்துள்ளது.

மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பேராதனை போதனா வைத்தியசாலையிலும் சத்திர சிகிச்சைகள் இடை நிறுத்தப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் குறித்த அறிவிப்பு மீளப் பெறப்பட்டிருந்தது.

இதேபோன்று நாட்டின் பல வைத்தியசாலைகளிலும் தொடர்ந்து சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாதளவுக்கு நிலமை மோசமடைந்து வருகிறது.

இதேவேளை இலங்கையில் நிலவும் மருந்துப் பொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டிற்கு மத்தியில் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை மட்டுப்படுத்த வைத்தியசாலை நிர்வாகப் பிரிவுக்குள் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சுகாதார கட்டமைப்புத் தொடர்பில் கொழும்பில் கடந்த தினத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இத்தகவலை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, வைத்தியசாலைகளில் உள்ள மருந்துகளின் கையிருப்பானது அடுத்த வாரத்திற்கு மட்டுமே போதுமானதாகும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதன்போது தெரிவித்துள்ளார்.

அவசியமான மருந்துகளின் அளவுகளை வைத்தியசாலைகளுக்கு தேவையான அளவு விநியோகித்து வருவதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கையில் எதிர்வரும் நாட்களில் சாதாரண சிகிச்சைகளைக்கூட மேற்கொள்ள முடியாத நிலைமையேற்படும் அபாயமேற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு நிலை ஒருபக்கம் மக்களை பெரும் இக்கட்டுக்குள் தள்ளியுள்ள நிலையில், மருத்துவத்துறை சந்தித்துவரும் நெருக்கடியானது நிலமையை மேலும் மோசமாக்குவதாகவே அமைந்துள்ளது.

உயிர்காக்கும் மருத்துவத்துறை சந்தித்துள்ள நெருக்கடி நிலை தீவிரமடையுமானால், அதன் விளைவுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவே அமையும் என மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tamil News

Leave a Reply