மருந்துகளின் ஆய்வை தரமுயர்த்த நடவடிக்கை

இலங்கையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற மருந்து பரிசோதனை ஆய்வகம் இல்லாதது பெரும் குறையாகக் கருதப்பட்டு வந்த நிலையில், தற்போதுள்ள வசதிகளை உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) எனும் மருந்தின் சில தொகுதிகள் மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு கருத்துத் தெரிவித்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மருந்து பரிசோதனைகளுக்கு இலங்கை இன்னும் வெளிநாட்டு ஆய்வகங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளதாகவும், கடந்த காலங்களில்அ திகாரத்திலிருந்தவர்கள் உள்ளூர் வசதிகளை மேம்படுத்தத் தவறியதே இதற்கு முக்கிய காரணமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரான்’ மருந்தைத் தயாரித்த இந்திய நிறுவனமான ‘மான் பார்மாசூட்டிகல்’ (Maan Pharmaceutical), மீளப் பெறப்பட்ட மருந்து மாதிரிகளை சுயாதீனமான சர்வதேச ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.  இந்தக் கோரிக்கை தற்போது மருந்துகள் மதிப்பீட்டுக் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.