கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியமை எனக்கு மிகுந்த மிகுந்த கவலையளிக்கிறது-மாவை

”தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருக்கின்றார்கள். எனக்கு அது மிகுந்த மிகுந்த கவலையளிக்கிறது.விலகிச் சென்றவர்களை தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் இணைத்து பயணிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு துணைத் தலைவராக இருக்கின்றேன். அவ்வாறு நான் ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு மாற்று தலைமை வேண்டும் என்று சொல்வதைப் போன்ற அறிவீனம் வேறு ஏதும் இருக்காது.

இரண்டாவது தமிழ் மக்களிடம் ஒரு மாற்றுத் தலைமை வேண்டு என்பது பரவலான செல்வாக்கு மிகுந்த கோரிக்கையாக இன்று இல்லை. துரதிஸ்ரவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருக்கின்றார்கள். எனக்கு அது மிகுந்த கவலை.

நாங்கள் தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான, மோசமான காலகட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும். மாற்றுத் தலைமை என்பது ஜனநாயக ரீதியாக அவர்கள் யாரும் அப்படி பேசலாம், அப்படியான கட்சியாக இயங்கலாம் ஆனால் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டாயம் இன்னும்  பலமடைய வேண்டும் என்றார்.