அரசியல் கைதிகள் விடுதலை குறித்து மனோ கணேசன் கருத்து

65 Views

“பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10- 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது” என காலிமுக போராட்டக்காரர் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்   தெரிவித்துள்ளார்.

மேலும் “காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம்.  இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான்”என்றும் தெரிவித்துள்ளார்.

காலிமுக போராட்டக்கார இயக்கத்தினர் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை முற்பகல் நடத்திய கலந்துரையாடலில் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட மனோ மேலும் கூறியதாவது,

“ரணில் இன்று ஜனாதிபதி. அவருடன் அரசியல் காரணங்களுக்காக எதிரணி என்ற முறையில் நாம் முரண்படலாம். முரண்பாடுகள் உள்ளன. ஆனால், அவர் சட்டப்படித்தான் ஜனாதிபதி ஆகியுள்ளார். இயன்றவரை சீக்கிரம் புதிய ஒரு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு, புதிய மக்கள் ஆணை பெறப்பட்டு, புதிய பாராளுமன்றம் அமைய வேண்டும். ஆகவே சீக்கிரம் “புதிய ஒரு பாராளுமன்ற தேர்தல் தேவை”, என்பதையும் மேலதிக ஒரு கோஷமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கைதான். அதையும் நாம் ஜனாதிபதி ரணிலிடம் சொல்வோம். உங்கள் கோரிக்கை நீண்ட காலமாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களுடன் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது” என்றார்.

Leave a Reply