தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கமொன்றை அமைக்க முன்வருமாறு மனோ கணேசன் அழைப்பு

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கமொன்றை பாராளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஷ்வரன் ஆகியோருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்கள் மற்றும் பங்காளிக்கட்சி தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் உடன்பாட்டுடன் இந்த அழைப்பை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சந்தித்துள்ள தேசிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை தேட இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகளை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சியுடன் நின்றுவிடாமல், தேசிய நெருக்கடிக்கு மூல காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தேடலும் இதனுடன் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply