ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
மலேசிய முதல் துணை பிரதமராகவும், இரண்டாவது பிரதமராகவும் பதவி வகித்த அப்துல் ரசாக் ஹூசைனின் மகன்களில் ஒருவரான நஜிப் ரசாக் அந்நாட்டின் 6வது பிரதமராக கடந்த 2009ம் ஆண்டு பதவி ஏற்றார். சுமார் 9 ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்தார்.
நஜிப் ரசாக் பிரதமராக பதவியேற்றதும் வளர்ச்சி நிதியம் ஒன்றை தொடங்கினார். இந்த நிதியத்தில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை கொள்ளையடிக்கப்பட்டதாக முதலீட்டாளர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நிதியத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷ்னலிடம் இருந்து 9.4 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை நஜிப் ரசாக் சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2020ம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மலேசிய உயர்நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மைனும் துவான் மட் தலைமையிலான அமர்வு, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இனி மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இல்லாததால், நஜிப் ரசாக்கை உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நஜிப் ரசாக், தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என தெரிவித்தார். மேலும், தீர்ப்பு முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும், இதனால் தீர்ப்பு முன்கூட்டியே இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்ட நஜிப் ரசாக், இது உண்மையாக இருக்குமானால், நீதித்துறையின் தவறான நடவடிக்கையாக இது கருதப்படும் என்றார்.
மலேசியாவில் பிரதமராக இருந்த ஒருவர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை.